சேலம் ஜில்லா போர்டு மெம்பர் திரு. ராஜமாணிக்கம் பண்டாரம் முதல் பேர் சென்னை கவர்னரின் அந்தரங்க காரியதரிசிக்கு அனுப்பிய தந்திச் செய்தி.
ஜில்லா போர்டு தலைவராயிருந்த திரு போல்க்ஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்தவுடனே லோக்கல் போர்டு ஆக்டு 17-வது பிரிவின்படி மார்ச் 31 வேறு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு கூட்டம் கூட்டும்படி தீமானிக்கப்பட்டது. திருபோல்ஸின் ராஜிநாமாவை ஒப்புக்கொண்ட பிறகு அந்தக் கூட்டத்தில் தானே மறு தலைவர் தேர்தலையும் நடத்தவேண்டுமென்று மந்திரி உத்தரவு கொடுத்தார். அந்த உத்தரவுபடி திரு போல்சின் ராஜிநாமாவை ஒப்புக்கொண்ட கூட்டத்திலேயே ராவ்பகதூர் எல்லப்ப செட்டியார் ஏகமனதாக எல்லோராலும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தேர்தல் முடிவை 6-வாரம் வரை கெஜட்டில் பிரசுரம் செய்யாமல் மந்திரி நிறுத்தி வைத்தார். மே15 தேதி திரு எல்லப்ப செட்டியார் தேர்தலை ரத்து செய்து உடனே வேறு தேர்தல் நடத்த வேண்டுமென மந்திரி உத்தரவிட்டார். இரண்டாம் முறையும் அவர் உத்தரவுப்படி நடத்தப்பட்டது. மே 23 தேர்தல் நடத்துவதாக ஒரு வாரத்துக்கு முன்னதாகவே நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. மே 22 தேதி மந்திரி மீண்டும் தேர்தல் நோட்டீஸை ரத்து செய்து, நோட்டீஸின் போக்குவரத்துக்கு 2 நாளும் சட்டப்படி கூட்டத்துக்கு முன் 7 நாளும் ஆக 9 நாள்களுக்கு முன்னாலேயே தேர்தல் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மூன்றாம் முறையும் அவரது உத்தரவு அனுசரிக்கப்பட்டது.
(குடி அரசு - கட்டுரை - 19.06.1927)